உரிய ஆவணம் இல்லாததால் ரூ.2¾ லட்சம் பறிமுதல்
உரிய ஆவணம் இல்லாததால் ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு கே.கே.நகரை சேர்ந்த தேவக்குமார் என்பதும், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் (பிரப்ரோடு) பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மொபட்டை ஓட்டி வந்தவரின் பெயர் அப்புக்குட்டி என்பதும், மருந்து விற்பனை பிரதிநிதியான அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோட்டில் நேற்று 2 பேரிடம் மொத்தம் ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.