ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு


ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு
x

ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

ராணுவ வீரர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 41). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வேலாயுத நகர் முதல் குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் காந்தியின் மனைவி ரேணுகா (32) தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அணைக்கரை அருகே உள்ள அல்லியூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு 3 குழந்தைகளுடன் ரேணுகா சென்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப்பாள் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அக்கம்பக்கத்தினர் ரேணுகாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நகை, பணம் திருட்டு

இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ட்ரங்கு பெட்டியில் வைத்திருந்த 2 சவரன் நெக்லஸ், ½ பவுனில் 2 தோடுகள் உள்ளிட்ட 3 சவரன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைக்க முடியாததால் முன்பக்க தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்தது.

இதேபோல் ராணுவ வீரர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆண்டிமடம் திருக்களப்பூர் பகுதியை சேர்ந்த டாஸ்மாக் லோடுமேன் வேல்முருகன் (39) என்பவருடைய மனைவி ராதிகா (32) தனது 2 குழந்தைகளுடன் திருப்பனந்தாள் அருகே காட்டூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டின் முன்பக்க தாழ்ப்பாளை உடைத்து வீட்டில் வைத்திருந்த 2 ஜோடி கொலுசு மற்றும் ரூ.300-ஐ மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், 2 வீடுகளில் திருட்டுப்போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அரியலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story