ராணுவ அதிகாரியின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் கார் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி


ராணுவ அதிகாரியின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் கார் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி
x

ராணுவ அதிகாரியின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பழைய காரை விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

ராணுவ அதிகாரியின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பழைய காரை விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைனில் கார் விற்பனை

வீட்டு உபயோக பொருட்கள், செல்போன், காய்கறிகள், மளிகை பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் பழைய பொருட்களையும் குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். அந்த வகையில் ஆன்லைனில் பலரும் தங்களுடைய பழைய பொருட்களை விற்பனை செய்வதோடு, பழைய பொருட்களை வாங்குகின்றனர். அதேநேரம் ஆன்லைனில் பழைய பொருட்களை விற்பதாக அவ்வப்போது மோசடிகளும் நடக்கின்றன.

இந்தநிலையில் ராணுவ அதிகாரி சீருடையுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் பழைய கார் விற்பனை செய்யப்பட இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டது. அதில் ராணுவத்தில் திடீரென்று பணியிட மாறுதல் வழங்கப்பட்டதால் காரை குறைந்த விலைக்கு விற்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.2 லட்சம் மோசடி

இதனால் குறைந்த விலைக்கு காரை வாங்கி விடலாம் என்ற ஆசையில் திண்டுக்கல், பழனியை சேர்ந்த 4 பேர் தனித்தனியாக ஆன்லைனில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினர். இதையடுத்து காரை அனுப்பி வைப்பதாகவும் நேரில் பார்த்துவிட்டு பணம் தந்தால் போதும் என்றும் அந்த நபர் பதில் அனுப்பினார். அடுத்த சில நாட்களில் காரை அனுப்பி விட்டதாகவும், வரி உள்ளிட்டவை செலுத்த தனது வங்கி கணக்கில் பணம் அனுப்பும்படி அந்த நபர் கூறியிருக்கிறார்.

அதை உண்மை என நம்பி 4 பேரும் தனித்தனியாக பணம் அனுப்பினர். அதன்படி மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வரை அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கார் வந்து சேரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த 4 பேரும் தனித்தனியாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த ராணுவ அதிகாரியின் புகைப்படத்தை பயன்படுத்தி கார் விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story