லேப் டெக்னிஷீயனிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி
விழுப்புரம் அருகே லேப் டெக்னிஷீயனிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
லேப் டெக்னிஷீயன்
விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் விஷ்ணு (வயது 25), லேப் டெக்னிஷீயன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி கொண்டிருந்தபோது ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் இருந்த லிங்கிற்குள் சென்றவுடன் வாட்ஸ்-அப் எண் மூலம் ஒருவர், விஷ்ணுவை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர், சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று விஷ்ணுவிடம் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து டெலிகிராம் லிங்க் மூலம் தொடர்புகொண்ட மற்றொரு நபர், ஒரு லிங்கை அனுப்பினார். உடனே விஷ்ணு, அந்த லிங்கிற்குள் சென்று ரூ.100 முதலீடு செய்து சில மணி நேரங்களில் ரூ.190-ஐ பெற்றுள்ளார்.
ரூ.2¼ லட்சம் மோசடி
அதன் பிறகு அந்த லிங்கில் இருந்த ரீசார்ஜ் ஆப்ஷன் மூலமாக தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 2 சேமிப்பு கணக்கில் இணைக்கப்பட்டிருந்த கூகுள்பே, போன்பே, பேடிஎம் மூலமாக 13 தவணைகளாக ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 733-ஐ செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு சேர வேண்டிய தொகையை தராமல் அந்த மர்ம நபர்கள், விஷ்ணுவை ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.