தீபாவளி சீட்டு நடத்தி 35 பேரிடம் ரூ.2½ லட்சம் மோசடி
தீபாவளி சீட்டு நடத்தி 35 பேரிடம் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் முருங்கப்பாளைய தெருவை சேர்ந்தவர் அய்யனார் மனைவி ராஜகுமாரி (வயது 40). புருஷானூரை சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவர், பில்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் சென்று தன்னிடம் தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் கட்டினால் சீட்டு முடிந்ததும் அந்த பணத்துடன் சேர்த்து 2 கிராம் தங்க நாணயம், 35 கிராம் வெள்ளிப்பொருட்கள், 3 கிலோ பித்தளை பொருட்கள் ஆகியவற்றை தருவதாக கூறினார். இதை நம்பிய ராஜகுமாரி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 35 பேர், தீபாவளி சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 7 மாதத்துக்கு பணம் கட்டினர். அவர்கள் 35 பேரும் சேர்ந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை கட்டிய நிலையில் அந்த பணத்துடன் சேர்த்து பரிசுப்பொருட்களை கொடுக்காமல் வைத்திலிங்கம் காலம் தாழ்த்தி வந்தார். பலமுறை சென்று வற்புறுத்தி கேட்டபோதிலும் வைத்திலிங்கம், உரியவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வைத்திலிங்கம் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.