பழமையான 2 அடுக்கு பாலம் சேதமாகும் அவலம்


பழமையான 2 அடுக்கு பாலம் சேதமாகும் அவலம்
x

பழமையான பாலத்தின் மீது கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படுவதால் சேதமடையும் நிலை

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயின் மீது அழகிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள பழமையான பாலத்தின் மீது கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக இயக்கப்படுவதால் சேதமடையும் நிலை உள்ளது.

பழமையான பாலங்கள்

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய நீராதாரமாக அமராவதி அணை உள்ளது. இந்த அணையிலிருந்து 63 கிலோ மீட்டர் பயணம் செய்யும் அமராவதி பிரதான கால்வாய் மூலம் சுமார் 25 ஆயிரத்து 500 ஏக்கர் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆங்காங்கே கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் பகுதிகளில் கால்வாயின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் பல பழமையான பாலங்கள் அப்போதைய போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு குறுகலாக கட்டப்பட்டுள்ளது.

இதனால் அவற்றை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதிக்கு அருகில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த சாலை போக்குவரத்துக்காக அமராவதி பிரதான கால்வாய் மீது பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனரக வாகனங்கள்

இந்த பகுதிக்கு அருகில் பழமையான பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் ஓடை செல்லும் வகையிலும், மேல் பகுதியில் அமராவதி பாசன நீர் செல்லும் வகையிலும் 2 அடுக்கு பாலமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகள் மற்றும் கால்நடைகள் கால்வாயை குறுக்கே கடந்து பக்கவாட்டில் நடந்து செல்லும் வகையில் அழகிய வழித்தடமும், மறுபுறம் வாகனங்கள் செல்லும் வகையிலும் அழகான வடிவமைப்புடன் காணப்படுகிறது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் நின்று வழிந்தோடும் நீரை இயற்கையோடு சேர்ந்து ரசிப்பது ஆனந்தம் தரும் விஷயமாக இருக்கும். இந்தநிலையில் 4 வழிச்சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையாக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கார்கள் மற்றும் கனரக வாகனங்களும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.அதிலும் பாரம் ஏற்றிய லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குறுகலான இந்த பாலத்தின் வழியாக கடக்கும்போது பக்கவாட்டு சுவர்களில் உரசி ஆங்காங்கே சேதமடைந்து வருகிறது.மேலும் வாகனங்களின் பாரம் தாங்காமல் இந்த பாலம் படிப்படியாக வலுவிழக்கும் அபாயம் உள்ளது.எனவே இந்த பாலத்தை பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் இயக்குவதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story