26½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
அம்மாபாளையம் அருகே 26½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 பேரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே களரம்பட்டியில் உள்ள அரிசி ஆலையில் கடந்த 6-ந்தேதி 400 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 20 டன் ரேஷன் அரிசியையும், 130 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 6½ டன் உடைத்த குருணை ரேஷன் அரிசி என மொத்தம் 26½ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஆறுமுகத்தை (வயது 41) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் 2 பேர் கைது
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த அரிசி ஆலை குத்தகைதாரரான திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, அதம்பார் படுகையை சேர்ந்த நடராஜன் மகன் பாரதி என்கிற சுரேசையும் (28), சரக்கு வாகன உரிமையாளரான திருச்சியை சேர்ந்த அழகர் மகன் அய்யப்பனையும் (29) போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்களை பிடிக்க திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி சரக துணை சூப்பிரண்டு சுதர்சன் மேற்பார்வையில், திருச்சி இன்ஸ்பெக்டர் சுதாகர், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், போலீசார் சுரேஷ்குமார், கதிரவன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுரேசும், அய்யப்பனும் நேற்று களரம்பட்டி அரிசி ஆலைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சுரேசையும், அய்யப்பனையும் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
விசாரணையில் அவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம், மாரப்ப கவுண்டர் வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து ரேஷன் அரிசி கடத்தல் தொழில் செய்து வந்ததும், தற்போது நாமக்கலில் உள்ள கோழி பண்ணைகளுக்கு ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு களரம்பட்டி அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் சுரேசையும், அய்யப்பனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.