வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
களக்காடு அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வனவிலங்குகள் வேட்டை
களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் கடந்த 14-ந் தேதி ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கீழவடகரையை சேர்ந்த ஒரு கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ச்சியாக வேட்டையாடி கறியை பங்கு போட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கும் வனவிலங்குகளின் இறைச்சி வினியோகம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் கடந்த 23-ந் தேதி கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ரமேஷ் (வயது 33) என்பவரை கைது செய்தனர்.
2 பேர் கைது
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கீழவடகரை தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (55), கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்த கண்ணன் (44) ஆகிய இருவரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டவர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.