கோவில்களில் திருடிய கும்பல் மீது மேலும் 2 வழக்கு
கோவில்களில் திருடிய கும்பல் மீது மேலும் 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை அருகே கிள்ளனூர் பகுதியில் சாலையோர கோவில்களில் திருடி விட்டு தப்பிய ஒரு கும்பலை பொதுமக்கள், வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த 10 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அண்டகுளம் பகுதியை 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் கோவில்களில் திருடியது தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலான கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லிபுஷ்பா, அவரது மகன் விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களது மற்றொரு மகன், மகள் ஆகியோரை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து, அவர்களது சொந்த ஊர் உள்ள காப்பகத்தில் தங்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் சத்தியநாராயணசாமி கும்பல் மீது மேலும் 2 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதில் ஒரு வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் எனவும், மற்றொரு வழக்கு நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் நிலையத்தில் தொடர்புடையதாகவும், இதில் வழக்கமான கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் போலீசார் கூறினர்.