கள்ளநோட்டு விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள்ளநோட்டு விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள்ளநோட்டு விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊர்க்காவல் படை வீரர்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கடலூர் ஊராட்சி மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன். இவருடைய மகன் ராஜேசுவரன்(வயது 28).
இவர் தமிழக கடலோர காவல் படைப்பிரிவில் ஊர்க்காவல் படை வீரராக இருந்து வருகிறார். இந்தநிலையில் ராஜேசுவரன் அ.மணக்குடி அருகே கள்ள நோட்டுகளை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை சோதனை செய்தனர்.
மேலும் 2 பேர் கைது
அந்த சோதனையில் அவரிடம் இருந்து ஒரு லட்சத்துக்கான 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ராஜேசுவரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவி (61), அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் (39) ஆகியோர் கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுத்தது தெரிய வந்தது.
இதை. தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்கள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.