மாணவி தற்கொலை வழக்கில் மேலும் 2 பேர் போக்சோவில் கைது

பாலியல் துன்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போக்சோவில் 8 மாதங்களுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பாலியல் துன்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேரை போக்சோவில் 8 மாதங்களுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-2 மாணவி தற்கொலை
கோவையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், அந்த மாணவி, அதற்கு முன்பு படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர் மற்றும் சிலரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
பாலியல் தொல்லை
அவர்கள் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த மாணவி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் போது தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 32) மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
மேலும் மாணவி எழுதிய கடிதம் சிக்கியது. அதன் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் (53) கைது செய்யப்பட்டார்.
பாலியல் துன் புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடிதத்தில் பெயர்கள்
இந்த நிலையில் மாணவி எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது... என்றும் பள்ளி ஆசிரியர் உள்பட சிலரின் பெயர்களையும் எழுதி இருந்தார்.
அதன் பேரில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது சுல்தான் (70), மனோராஜ் (58) ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதில் முகமது சுல்தான் கோவையில் பாத்திரக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் 2 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கில் 8 மாதங்களுக்கு பிறகு மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.






