தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்தபெண்களின் ஆபாச படம் விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்த பெண்களின் ஆபாச படம் விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைசேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் வசந்தகுமார் (வயது 25). இவர் அதே பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில்(100 நாள் வேலை) பணித்தள பொறுப்பாளராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைக்கு வரும் பெண்களை இவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வேலைக்கான வருகையை உறுதி செய்வது வழக்கம். அதன்படி வேலைக்கு வரும் ஏராளமான பெண்களை அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டத்தில் வேலை செய்து வரும் பெண்களின் போட்டோ மற்றும் வீடியோவை வசந்தகுமார் தனது செல்போனில் எடுத்து, ஆபாசமாக மார்பிங் செய்து, வைத்திருந்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்யக்கோரி, இத்திட்டத்தில் பணிபுரிந்த பெண்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தியாகதுருகம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
அழித்த படங்களை
மீண்டும் எடுத்தார்
அதில், வசந்தகுமார் தனது செல்போனை, நண்பரான தினஷே்(27) என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து இருக்கிறார். அப்போது, அந்த போனில் இருந்த வீடியோ, புகைப்படங்களை அழித்துவிட்டு கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ், தொழில்நுட்ப உதவியுடன் அந்த செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை எடுத்து பார்த்தார். அதில் ஆபாசமான படங்கள் இருந்ததை பார்த்து, வசந்தகுமாரிடம் கூறியுள்ளார். அப்போது வசந்தகுமார் , அதை அழித்துவிடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்தையும் அழிக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என்று தினஷே் வசந்தகுமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணத்தை விரைவில் தருவதாக அவர் கூறியுள்ளார்.
2 பேர் கைது
இதனிடையே, தினேஷ், இந்த புகைப்படங்கள் தொடர்பாக தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரவியிடம் கூறினார். ஏற்கனவே ரவிக்கும், வசந்தகுமார் தரப்புக்கும் இடையே முன் விரோதம் உள்ளதால், வீடியோ தொடர்பான தகவலை ஊர்மக்களிடம் ரவி தெரிவித்தார் என்பது போலீசாரின் விசாரணையின் போது தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ், ரவியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
20 பேர் மீது வழக்குப்பதிவு
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு நடந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி (35) தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பிரேம்குமார், கோவிந்தராஜ், ஆனஸ்ட்ராஜ், சதீஷ், ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.