வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது - ரூ.5 லட்சம் பறிமுதல்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
சென்னை,
சென்னை வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த 16-ந் தேதி புகுந்த 7பேர் கும்பல் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி லாக்கரில் இருந்த ரூ7லட்சம் பணத்தை கொள்ளையடித்து சினிமா பட பாணியில் அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினர்.
அப்போது சரவணன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளை கும்பலை விரட்டி சென்றனர். அதில் கல்லூரி மாணவரான ரியாஸ் பாஷா என்பவரை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கொள்ளையில் தொடர்புடைய கிஷோர்கரன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த மேலும் 4பேரை பிடிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையில் பதுங்கி இருந்த ஜானி என்கிற சந்தோஷ், தினேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.