2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 5-ந் தேதி தொடங்குகிறது
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி முதல தொடங்குகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கி நடக்கிறது.
2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் முதல்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக வருகிற 5-ந் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 33,34,35,44,45,46,47,48,49,50,51,56,58,59,60 ஆகிய வார்டுகளிலும், 4-வது மண்டலத்தில் 28,29,36,37,38,39,40,41,42,43,52,53,54,55,57 ஆகிய வார்டுகளிலும் விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. மேலும் உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள், அவினாசி, மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம், சாமளாபுரம், சங்கராமநல்லூர், தளி, கன்னிவாடி, குன்னத்தூர், கொளத்துப்பாளையம், மூலனூர், ஊத்துக்குளி, முத்தூர், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 15 பேரூராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது.
டோக்கன் வினியோகம்
அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள விண்ணப்ப பதிவு மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ரேஷன் கடை விற்பனையாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் நாளை வரை விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்களில் நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு வீடு, வீடாக நேரடியாக சென்று வினியோகம் செய்கிறார்கள். ரேஷன் கடைகளுக்கு மக்கள் விண்ணப்பம் பெற செல்லவேண்டியதில்லை.
2-ம் கட்டத்தில் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் முகாமுக்கு வர இயலாதவர்கள் வருகிற 15,16-ந் தேதிகளில் முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
---------------