அடுத்தடுத்து 2 மயில்கள் சாவு
உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 2 மயில்கள் சாவு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் ரோடு புறவழிச்சாலை பகுதியில் காயங்களுடன் மயில் ஒன்று இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த மயிலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். மேலும் மயில் எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் குணமங்கலம் கிராமத்தில் உயரழுத்த மின் கம்பியில் சிக்கிய பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது. அப்போது மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தடைபட்டதால் தகவல் அறிந்து வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயிலை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மின்பாதை சீரமைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து இரண்டு மயில்கள் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.