14 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது


14 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

நாமக்கல்லில் இருசக்கர வாகனங்களை திருடிய 14 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

மோட்டார் சைக்கிள் திருட்டு

நாமக்கல் அழகுநகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 41). ஷேர்ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று கணேசபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற பாக்கியராஜ், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் மோகனூர் சாலை அய்யப்பன் கோவில் அருகே உள்ள சதானந்தம் என்பவரின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், அருணாசலம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நாமக்கல் கொசவம்பட்டி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது எனவும், அவர்களில் ஒருவர் கொசவம்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்த காளிமுத்து (25) என்பதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாமக்கல் பகுதியில் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கொல்லிமலை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான 6 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story