தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
பரமத்தி வேலூரில் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் தனபால் (வயது42). சுமை தூக்கும் தொழிலாளி. நன்செய் இடையாறை சேர்ந்த தினேஷ் (31) வெல்டர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தனியார் வங்கி அருகே தனபால் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தினேஷ் மற்றும் நன்செய் இடையாறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கவின் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தனபால் தன்னை தாக்கியதாக தினேஷ் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.