பெட்டிக்கடைக்காரரின் மண்டையை உடைத்த 2 பேர் கைது
அன்னவாசல் அருகே சோடா பாட்டிலால் தாக்கி பெட்டிக்கடைக்காரரின் மண்டையை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லூதர்சாமி (வயது 42). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெட்டிக்கடைக்கு வயலோகம் மாதாகோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் ராமவிக்னேஷ்வரன் (24), அகரப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முருகையா மகன் பாலசுப்பிரமணியன் (28) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது பொருட்கள் வாங்குவதில் அவர்களுக்கும், லூதர்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மண்டை உடைப்பு
இதில் ஆத்திரமடைந்த ராமவிக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் லூதர்சாமியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் சோடா பாட்டிலால் அவரது தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லூதர்சாமி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த லூதர்சாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமவிக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.