கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சாத்தூர் தாலுகாவில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து (வயது 28). இவரது உறவினர் கண்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். கண்ணன் சம்பள பணம் வாங்க சென்றவர் நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் காளிமுத்து, செந்தில்குமார் என்பவருக்கு போன் செய்து கண்ணன் குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து செந்தில்குமார், தனது நண்பர் மாரியப்பன் என்பவருடன் வந்து இந்திராநகர் சமுதாய கூடம் அருகில் நின்று கொண்டிருந்த காளிமுத்துவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் செந்தில்குமார் (49), மாரியப்பன் (38) இருவரையும் பிடித்து காளிமுத்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.