கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது


கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 3:34 AM IST (Updated: 10 Aug 2023 3:35 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனச்சரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்மநேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்பு மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 30), முத்துராஜ் மகன் ராஜாசிங் (27), தங்கத்துரை மகன் ரவிக்குமார் (27), குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த முவின் (40) உள்பட சிலர் பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கடமானை வேட்டையாடி, கறியை வெட்டி பங்கு போட்டதும், மீதி கறியை காரில் எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. கடமான் வயிற்றில் குட்டி இருந்துள்ளது. அதனை கொடூரமான முறையில் கீறி வெளியே எடுத்து, கடமானின் தலை, எலும்பு உள்ளிட்டவற்றுடன் குட்டியின் உடலையும் கிணற்றில் வீசியதும் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ரவிக்குமார், ராஜாசிங் ஆகியோரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களை வனத்துறையினர் தலையணை தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்ததாக கூறியும் அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தலையணை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் வனத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்புகளையும் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த களக்காடு போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி தலையணை மூடப்பட்டது. மாலை வரை தலையணை திறக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தலையணைக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கைதான 2 பேரும் விசாரணைக்கு பிறகு நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ், முவின் உள்ளிட்ட சிலரை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாசிங் புதுமாப்பிள்ளை ஆவார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story