ஐம்பொன் சிலையை ரூ.1½ கோடிக்கு விற்க சென்ற 2 பேர் கைது


ஐம்பொன் சிலையை ரூ.1½ கோடிக்கு விற்க சென்ற 2 பேர் கைது
x

திருவண்ணாமலையிலிருந்து ஐம்பொன் சிலையை ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையிலிருந்து ஐம்பொன் சிலையை ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தல்

திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு சிலை கடத்தி விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் வேலூரையடுத்த அரியூர் மலைக்கோடி பகுதிக்கு செல்வதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தெரியவந்தது.

இது குறித்து வேலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக வேலூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அரியூர் மலைக்கோடி பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து விட்டு தப்பி ஓடினர்.

விரட்டிச்சென்று மடக்கினர்

இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டிச் சென்று சாத்துமதுரை அருகே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது41), திருவண்ணாமலையை அடுத்த புதுமை மாதாநகர் சர்ச் தெருவை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (45) என்பதும் அவர்கள் கடத்தி வந்தது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மன் சிலை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ய

கைதான வின்சென்ட்ராஜ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரிடம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை கொடுத்து விற்பனை செய்து கொடுத்தால் அதற்கான கமிஷன் தொகை தருவதாக கூறி உள்ளார். இதையடுத்து சிலையை திருவண்ணாமலையில் இருந்து வேலூர் மலைக்கோடியில் விற்பனை செய்ய கண்ணன் என்பவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்துள்ளார். இந்த சிலையை சுமார் ரூ.1கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சிலை திருடப்பட்டதா?, எங்கு திருடப்பட்டது?, யாரிடம் விற்பனை செய்ய வந்தனர்? என்பது உள்ளிட்ட விவரங்களும் சேகரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story