ஆன்லைனில் லாட்டரி விற்ற 2 பேர் கைது


ஆன்லைனில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

சுசீந்திரம் அருகே ஆன்லைனில் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே ஆன்லைனில் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்டத்திலும் சிலர் தடையை மீறி விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க போலீசாரும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்தநிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் போலீசார் நேற்று மாலை சுசீந்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுசீந்திரம் கற்காடு சந்திப்பு பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

2 பேர் சிக்கினர்

உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தியதில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது அம்பலமானது.

மேலும் அவர்கள் தூத்துக்குடி ஆட்டோ காலனி பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 31), நெல்லை மாவட்டம் ஊத்துமலை ரோடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் (19) என்பதும், இதில் அபிலாஷ் மீது ஏற்கனவே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றதாக சென்னையில் வழக்கு இருப்பதும், இளங்கோ மீது தூத்துக்குடியில் அடிதடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7,410-ம் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்க பயன்படுத்திய 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.


Next Story