புதியவகை போதை பொருள் விற்ற 2 பேர் கைது


தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூரில் புதிய வகை போதை பொருளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூரில் புதிய வகை போதை பொருளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீசார் சோதனை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையிலான போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக சிறிய அளவிலான குப்பிகளில் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 மில்லி கிராம் எடை கொண்ட போதை பொருளை பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

300 மில்லி கிராம் போதை பொருள் பறிமுதல்

இதையடுத்து போலீசார் அந்த போதை பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அசாம் மாநிலத்தை சேர்ந்த அசாருல் இஸ்லாம் (வயது 22), அப்துல் முத்தலீப் (37) என்பதும், கோவை தொண்டாமுத்தூரில் தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வைத்து இருந்த 300 மில்லி கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்து இருந்தது ஹெராயின் போதை பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவ்வாறு ஹெராயின் போன்று இல்லாமல் புதிய வகை போதை பொருள் போன்று உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையில் புதிய வகையான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

புதிய வகை போதை பொருள்

அசாருல் இஸ்லாம் மற்றும் அப்துல் முத்தலீப் ஆகியோர் வைத்திருந்தது என்ன வகையான போதை பொருள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் பல்வேறு போதை பொருள் பவுடர் கலந்ததுபோன்று புதிய வகை போதை பொருள் போன்று உள்ளது. அதன் நிறமும் ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. அதன்மதிப்பு ரூ.16 ஆயிரம் இருக்கும்.

அது என்ன வகையான போதை பொருள் என்பதை கண்டறிய கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரசாயன பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவு வந்த பின்னரே அது என்ன போதை பொருள் என்பது தெரியவரும். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story