ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு அனுப்பிய 2 பேர் கைது
ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு அனுப்பிய 2 பேர் கைது
திருவையாறு அருகே கூரியர் பார்சலில் ஜமாத் தலைவருக்கு மண்ைட ஓடு அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜமாத் தலைவருக்கு வந்த பார்சல்
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். இவர் ஜமாத் தலைவர் ஆவார். இவருக்கு கடந்த 3-ந்தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப்பெட்டியில் இருந்தது. அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்து விட்டார்.
இந்த நிலையில் அந்த பார்சலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதையடுத்து நேற்றுமுன்தினம் காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார். தந்தை கூறியதன் பேரில் முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அட்டைப்பெட்டியில் மண்டை ஓடு
அந்த அட்டைப்பெட்டியில் மனித மண்டை ஓடு இருந்தது. உடனே அவர் தனது தந்தையை அழைத்து மண்டை ஓடு இருப்பதை தெரிவித்தார். இதுகுறித்து திருவையாறு போலீசில் முகமதுகாசிம் புகார் செய்தார்.
அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டை ஓடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் பார்சல் அனுப்பிய தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம். ரஹ்மான் நகரை சோர்ந்த அப்துல்லா (40), கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்த முகமது முபின் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து 3 மண்டை ஓடுகளை எடுத்து எலுமிச்சை, பழம் குங்குமம், மண்டை ஓடு, பொம்மைகளை வைத்து மாந்திரீகம் செய்தது போல, கிப்ட் பேப்பர் கொண்டு பார்சல் செய்து திருவையாறு முகமது காசிம் மற்றும் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த 2 பேருக்கு அனுப்பியது தெரியவந்தது.
உளவியல் ரீதியாக துன்புறுத்த
முகமது காசிமையும், தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த 2 பேரையும் உளவியல் ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்பதற்கான இந்த பார்சல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய தஞ்சை தொம்பன்குடிசை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.