மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது


மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2023 10:45 PM GMT (Updated: 16 Sep 2023 10:45 PM GMT)

வியாபாரி போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் உத்தமி (வயது 72). கடந்த 11-ந் தேதி இவர், தனது தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களை முருங்கை வியாபாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் நைசாக பேச்சுக்கொடுத்த அவர்கள், உத்தமி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.கீரனூர் நால்ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அம்பிளிக்கையை சேர்ந்த நடராஜன் (வயது 32), சசிக்குமார் (27) என்பதும், உத்தமியிடம் சங்கிலியை பறித்துச்சென்றது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story