செல்போன் அலைக்கற்றை திருடிய 2 பேர் கைது: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கேரளாவுக்கு தனிப்படை விரைவு
தேனியில் செல்போன் அலைக்கற்றையை திருடி பயன்படுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்படும் சிலரை தேடி கேரளாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர
அலைக்கற்றை திருட்டு
தேனியில் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி, செல்போன் டவர்களில் இருந்து அலைக்கற்றைகளை திருடி மோசடியாக பயன்படுத்திய விவகாரம் உளவுத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதற்காக தேனி, ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் 4 வீடுகளை ஒரு கும்பல் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து இந்த நூதன திருட்டில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தேனி பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப பிரிவு அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், மாஞ்சேரி பகுதியை சேர்ந்த முகமது அலி மகன் சஜீர் (வயது 41), அதே பகுதியை சேர்ந்த முகமது ஆஷிப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிய வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 31 நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
ரகசிய உரையாடல்கள்
கைதான இருவரிடமும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து நேற்று அவர்கள் 2 பேரும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்போன் அலைக்கற்றையை திருடிய நபர்கள் அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் பேசுவதற்கும், ரகசிய உரையாடல்கள் மேற்கொள்ளவும் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் மூலம் தொலைபேசியில் பேசினால், செல்போன் சிக்னல் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும். இணையதள குற்றங்கள், சட்டவிரோத சதித்திட்டம் தீட்டுதல், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றுக்கு இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பிடிபட்ட 2 பேரும் தங்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் குறித்து தெரியாது என்றும், இதை நிறுவி விட்டு வெளியூர்களில் இருந்து இயக்கி வரும் நபர்களுக்கே இதுகுறித்து தெரியும் என்றும் கூறினர்.
கேரளாவுக்கு தனிப்படை
கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியது எப்படி? பயங்கரவாத அமைப்புகளோடு யாரேனும் தொடர்பில் இருந்தார்களா? அலைக்கற்றை திருட்டு மூலம் எந்த மாதிரியான சட்டவிரோத செயல்களை செய்தார்கள்? என்பது இந்த கும்பலின் முக்கிய நபர்கள் சிக்கினால் தான் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மனைவியாக நடித்த பெண்
மேலும் இந்த கும்பலுக்கு வாடகைக்கு வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கணவன், மனைவி போல் இருவர் வந்து தங்களை மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறியதாகவும், முறையாக வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி வீடு கொடுத்ததாகவும் கூறினர். இதனால், வீடு வாடகைக்கு பிடிக்க மனைவி போல் நடித்த பெண் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.