ஆடு திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருவைக்குளம் ஏ.எம்.பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சுப்பையா (வயது 40). இவர் ஆடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆடுகள் தருவைகுளம் அருகே உள்ள குமாரபுரம் விலக்கு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் ஒரு ஆட்டை மோட்டார் சைக்கிளில் வைத்து திருடிசென்று விட்டனர்.
இதுகுறித்து சுப்பையா தருவைகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அனந்தமாடன் பச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சத்தியமூர்த்தி (19), அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாடசாமி (40) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சுப்பையாவின் ஆட்டை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தருவைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் விரைந்து சென்று சத்தியமூர்த்தி, மாடசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.