இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
அச்சன்புதூர் அருகே இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
அச்சன்புதூர் அருகே வடகரையில் அடவிநயினார் அணையில் இருந்து விவசாய நிலப் பகுதிகளுக்கு வரும் கால்வாயில் ஏராளமான இரும்பிலான மதகுகள் உள்ளது. அந்த மதகுகள் பழுதடைந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பழைய மதகுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய மதகுகள் மாற்றப்பட்டது. பணி முடிவடைந்த நிலையில் அங்கேயே பழைய இரும்பு மதகுகள், உதிரி பாகங்கள் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென அங்கே வைக்கப்பட்ட ரூ.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு மதகுகள் அனைத்தும் காணாமல் போனது. இதுகுறித்து பொதுப்பணித்துறை காவலாளி சண்முகசுந்தரம், அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அச்சன்புதூர் அருகே உள்ள உதயச்செல்வன்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் ஜெயராம் (வயது 22), வடகரை மேட்டுக்கால் தெருவை சேர்ந்த முகம்மது ஆதம் மகன் முகைதீன் யாசர் அராபத் (26) ஆகியோர் திருடிச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கைது செய்தார். அவர்களிடம் இருந்த அனைத்து இரும்பு மதகு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.