கள்ளநோட்டை கொடுத்து ஓட்டல் உரிமையாளரை ஏமாற்ற முயன்ற 2 பேர் கைது
கரூரில் கள்ளநோட்டை கொடுத்து ஓட்டல் உரிமையாளரை ஏமாற்ற முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளநோட்டை மாற்ற முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் இளையராஜா (வயது 34). இவர் கரூர் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ஓட்டலுக்கு வந்து 2 பேர் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டதற்கான பணத்தை இளையராஜிடம் கொடுத்துள்ளனர். அப்போது, அந்த பணத்தை வாங்கி பார்த்தபோது போலியாக அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு என அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தர வடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் கரூர் பாகனத்தம் செல்வநகர் காலனியை சேர்ந்த நல்லுசாமி (வயது 27), இவர் கரூரில் ஒரு வக்கீலிடம் உதவியாளராகவும், மற்றொருவர் தம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்த பெயிண்டர் மணிகண்டன் (27) என்பதும், அவர்கள் 2 பேரும் பணத்தை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து ஓட்டல் உரிமையாளரை ஏமாற்ற முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், 2000 ரூபாய் கள்ள நோட்டு 2, 500 ரூபாய் கள்ள நோட்டு 4, கள்ளநோட்டை அச்சடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேப்பர் 2 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.