விழுப்புரம் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை ஏன்?போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் பல்பொருள் அங்காடி ஊழியா் கொலை செய்யப்பட்டது ஏன்? என போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்

பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம் (வயது 45). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்பொருள் அங்காடிக்கு வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன்களான ராஜசேகர் (33), வல்லரசு (23) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட இப்ராஹீமை அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

கடும் எதிர்ப்பு

இந்த கொலை வழக்கில் அண்ணன், தம்பிகளான ராஜசேகர், வல்லரசு ஆகியோரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பல்பொருள் அங்காடியில் இருந்த பெண்ணை ராஜசேகா், வல்லரசு ஆகியோா் தாக்கியதை தட்டிக்கேட்டதில் இப்ராஹீம் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்தது என்றும், போலீசார் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கைதான அண்ணன், தம்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வெளியான தகவல்கள் வருமாறு:-

பழக்கடை

கொலை செய்யப்பட்ட இப்ராஹீம், அந்த பல்பொருள் அங்காடியில் 3 வருடமாக ஊழியராக வேலை செய்து வந்தார். ஞானசேகர் என்பவர், அந்த பல்பொருள் அங்காடி முன்பு நடைபாதையில் பழக்கடை வைத்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்ராஹீம், ஞானசேகரிடம் சென்று, பல்பொருள் அங்காடிக்கு வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதால் உங்களுடைய பழக்கடையை சற்று ஓரமாக தள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்.

மிரட்டல்

இதனை ஞானசேகர், தனது மகன்கள் ராஜசேகர், வல்லரசு ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் அந்த பல்பொருள் அங்காடிக்கு சென்று நாங்கள் யார் தெரியுமா? என்று கேட்டு இப்ராஹீமை மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக இப்ராஹீம், பல்பொருள் அங்காடிக்கு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் கத்தியை வைத்துக்கொண்டு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தனர்.

அதோடு அங்கு நின்றுகொண்டிருந்த தீபக் என்பவரை அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.

சிறையில் அடைப்பு

அந்த சமயத்தில் பல்பொருள் அங்காடியில் இப்ராஹீம் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவர்கள் இருவரும், அந்த கடைக்குள் புகுந்து உன்னைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம் எனக்கூறி இப்ராஹீமை சரமாரியாக தாக்கினர்.

அதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால், அவரை குத்திக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகர், வல்லரசு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story