காய்கறி கடைக்காரரை தாக்கி ரூ.2½ லட்சம் பறித்த முன்னாள் ஊழியர் உள்பட 2 பேர் கைது
காய்கறி கடைக்காரரை தாக்கி ரூ.2½ லட்சம் பறித்த முன்னாள் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்பேட்டை
காய்கறி கடைக்காரரை தாக்கி ரூ.2½ லட்சம் பறித்த முன்னாள் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணம் பறிப்பு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே நகரகளந்தை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது 44). இவர் செஞ்சேரிமலையை அடுத்த பச்சாக்கவுண்டன்பாளையத்தில் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி மார்க்கெட்டிற்கு அனுப்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 10-ந் தேதி இரவு 11 மணியளவில் விக்னேஷ்வரன் தனது கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். நகரகளந்தை ராமன் தோட்டம் அருகே வந்தபோது, திடீரென 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை மறித்தனர். தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்ைட போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டது, டிரைவர்களான செஞ்சேரிமலையை சேர்ந்த அன்பழகன்(29), நகரகளந்தையை சேர்ந்த சூரியபிரகாஷ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை சுல்தான்பேட்டை இன்ஸ்பெக்டர் மாதையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ்காரர் வரதராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அன்பழகன், இதற்கு முன்பு விக்னேஷ்வரனின் கடையில் வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், விக்னேஷ்வரன் தினமும் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு பணத்தை எடுத்து செல்வது வழக்கம். இதை பறித்து செல்ல நண்பரான சூரியபிரகாசுடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு, வழிப்பறியை அரங்கேறினேன் என்று கூறியுள்ளார்.