அண்ணன்-தம்பியை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

கோவையில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்-தம்பியை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கணபதி
கோவையில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்-தம்பியை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிரிக்கெட்
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் முனியப்பன்(வயது 27). இவரது தம்பி கண்ணன்(25). வெல்டிங் தொழிலாளிகள். இவர்கள் கடந்த மாதம் 24-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் என்ற குண்டு சரவணகுமார் (32), கார்த்திக் என்ற பங்க் கார்த்திக் (30) உள்ளிட்ட சிலருடன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முனியப்பன்-கண்ணன் ஆகியோருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே முன்விரோதம் உருவானது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணப்ப நகர் தண்டுமாரியம்மன் கோவில் பின்புறம் சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு கண்ணன் வந்தார். உடனே அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தாக்குதல்
இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. உடனே சரவண குமார் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் கண்ணனை சரமாரியாக தாக்கி உதைத்தனர். இதை சவரணகுமாரின் நண்பரான அஸ்வின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணன் தனது அண்ணன் முனியப்பனுடன் அதே பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் மீண்டும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்ணன் மற்றும் அவரது அண்ணன் முனியப்பனை தாக்கியதாக தெரிகிறது.
கைது
இந்த சம்பவத்தை முனியப்பன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். தொடர்ந்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அண்ணன்-தம்பியை தாக்கியதாக ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார், கூலி தொழிலாளி கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவர்களது நண்பரான அஸ்வின் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர்.