பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற உறவினர் உள்பட 2 பேர் கைது


தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற உறவினர் உள்பட 2 பேர் கைது

கோயம்புத்தூர்

அன்னூர்

கோவை அருகே ரூ.5 லட்சம் கடனை திரும்ப கேட்டதால் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற உறவினர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண் கொலை

கோவை மாவட்டம் அ.மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 61). இவருடைய மனைவி தங்கமணி(54). இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம ஆசாமிகளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த அன்னூர் போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் தங்கமணியின் உறவினரான சுருக்குமணி கவுண்டன்புதூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கன்னியப்பன்(29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வட்டிக்கு கடன்

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தங்கமணி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவர், கடந்த 2020-ம் ஆண்டு தனது உறவினரான கன்னியப்பனுக்கு ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் கொடுத்தார். ஆனால் கன்னியப்பனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததால், தங்கமணியை கொலை செய்ய அவர் முடிவு செய்தார்.

அதன்படி தனது நண்பரான குமரன்காடு பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளி சுதாகர்(30) என்பவருடன் சம்பவத்தன்று தங்கமணியின் வீட்டுக்கு கன்னியப்பன் சென்றார்.

கைது

அவரிடம் வழக்கம்போல் பேச்சு கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்கு சென்ற அவரை பின்தொடர்ந்து கன்னியப்பன், சுதாகர் ஆகியோர் சென்றனர். பின்னர் அவர், வீட்டில் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரும்பு கம்பியால் கழுத்து மற்றும் முகத்தில் தாக்கினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது கழுத்தை இரும்பு உளியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை செய்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story