நெய்யூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
நெய்யூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திங்கள்சந்தை:
நெய்யூர் அருகே ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மற்றும் கல்குளம் மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் போலீசாருடன் நெய்யூர் அருகே ஆலங்கோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது26), கீழ ஆப்பிக்கோடு பகுதியை சேர்ந்த ஆன்றோபிரின்ஸ் (21) என்றும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 9 செல்போன்கள், பேக்கிங் கவர், எடை மெஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.