தீவட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி
ஓமலூர்
தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலியானார்கள்.
கூலித்தொழிலாளிகள்
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கே.மோரூரில் இருந்து காடையாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
கே.மோரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (27), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் காடையாம்பட்டிக்கு வந்திருந்தார். அங்கிருந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் 2 பேருடன் கே.மோரூருக்கு புறப்பட்டு சென்றார். கே.மோரூர் பெருமாள் கோவில் அருகே வரும்போது, ராஜதுரை முன்னால் சென்ற சரக்கு வேனை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
2 பேர் பலி
அப்போது அந்தவழியாக எதிரே வந்த சக்திவேலின் மோட்டார் சைக்கிளுடன், ராஜதுரையின் மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்குமு் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் ராஜதுரை, சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ராஜதுரையின் மோட்டார் சைக்கிள் வந்த மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.