அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு


அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு
x

கும்பகோணத்தில், அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில், அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கட்டிட தொழிலாளர்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு(வயது 48). கும்பகோணம் கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(43). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.நண்பர்களான இருவரும் தினமும் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் அந்த பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அதிக போதைக்காக மதுவில் சானிடைசர்

அவர்கள் அங்கு மதுகுடிக்க வந்தபோது பாலகுரு, சவுந்தரராஜன் ஆகிய இருவரும் மதுபாட்டிலுடன் சானிடைசரையும் சேர்த்து கொண்டு வந்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு மதுகுடித்துக்கொண்டு இருந்தவர்கள் சானிடைசரை குடித்தால் இறந்து விடுவீர்கள் என கூறியுள்ளனர்.ஆனால் அவர்கள் கூறியதை பாலகுரு, சவுந்தரராஜன் ஆகிய இருவரும் கண்டுகொள்ளாமல் மதுவில் சானிடைசர் கலந்து குடித்தால் போதை அதிகம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மதுவில் சானிடைசரை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

2 பேரும் பரிதாப சாவு

மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால் இருவரும் நள்ளிரவில் வயிற்று வலியால் துடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை படித்துறையில் ஒருவரும், கரையில் ஒருவரும் இறந்து கிடப்பதாகவும், கரையில் இறந்து கிடப்பவர் அருகில் ரத்தக்கறை இருப்பதாவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர்களின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை மாவட்ட தடயவியல் பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த ரத்தமாதிரிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.இறந்து கிடந்தவர்களின் அருகில் மதுபாட்டில்கள் மற்றும் சானிடைசர் பாட்டில்கள் கிடந்ததால் இருவரும் அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது ரத்தக்கறை கிடந்ததால் வேறு ஏதும் காரணமாக இவர்கள் இறந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story