ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டையில் தனித்தனி விபத்து ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உளுந்தூர்பேட்டை- திருவெண்ணய்நல்லூர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கதிர்வேல் சென்னை ராஜீவ்காந்தி அசரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து மகன் ரங்கசாமி(வயது 44). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று பேராவூரணி பகுதியில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறஞ்சி தனியார் பெட்ரோல் பங்க்கு அருகே வந்தபோது ரங்கசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக லாரியில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.