டிரைவர் உள்பட 2 பேர் பலி
பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நான்கு வழிச்சாலை பணி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் இருந்து நேற்று காலை 7.50 மணிக்கு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டு வந்தது. பஸ்சை மோகன்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கரப்பாடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) என்பவர் இருந்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.
இதற்கிடையில் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அய்யம்பாளையம் கருப்பராயன் கோவில் பகுதியில் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பாதையில் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் நோக்கி ஒரு சரக்கு வாகனம் சென்றது. எதிரே அந்த தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது.
தனியார் பஸ் மோதியது
இந்த நிலையில் திடீரென அந்த தனியார் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், சாலையின் இடதுபுறமாக சுமார் 50 அடி தூரம் பாய்ந்து தென்னை மரத்தை மோதி சாய்த்தப்படி தோட்டத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று பயணிகள் சத்தம் போட்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி
இது தவிர தனியார் பஸ் மோதியதில் சரக்கு வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. அதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நல்லூரை சேர்ந்த டிரைவர் நடராஜன் (50), டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (33), முத்துசாமி (35) ஆகியோரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜன், கிட்டுசாமி ஆகியோரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 23 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 34 பேர் படுகாயமடைந்தனர். இதில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கணேஷ் (20), பார்வதி (48), பிரவீன் (15) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், காவ்யா (19), செல்வகுமார் (17), மணிபாரதி (21), சரவணசாமி (60) ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 24 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கலெக்டர் ஆறுதல்
இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர், உறவினர்கள் திரண்டதால் அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், கோவை மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிவேகத்தில் வந்த பஸ், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது சரக்கு வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக கிணற்றில் கவிழவில்லை
பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் அய்யம்பாளையத்தில் சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் இடதுபுறமாக உள்ள தோட்டத்திற்குள் கவிழ்ந்தது. அந்த இடத்திற்கு முன் சுமார் 50 அடி தூரத்தில், தண்ணீர் நிரம்பிய நிலையில் கிணறு உள்ளது. அங்கு விபத்து நடந்து இருந்தால் பஸ் நிச்சயம் கிணற்றுக்குள் பாய்ந்து இருக்கும். இதனால் உயிர் சேதம் அதிகமாகி இருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. காலை நேரத்தில் அதிகமாக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ்கள் அதிகவேகத்தில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரத்தில் உள்ள கிணற்றின் மீது வலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
(பாக்ஸ்)சத்தம் மட்டும்தான் கேட்டது:
என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியவில்லை
பஸ்சில் சிக்கிய இளம்பெண் பேட்டி
விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணம் செய்த இளம்பெண் பவித்ரா கூறியதாவது:-
பொள்ளாச்சியில் உள்ள தனியார் மையத்தில் தச்சு பயிற்சி பெற்று வருகிறேன். கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பஸ்சின் முன்புறம் உட்கார்ந்து இருந்தேன். செல்போனை பார்த்து கொண்டிருந்ததால் பஸ் சரக்கு வாகனத்தின் மீது மோதியது தெரியவில்லை.
திடீரென்று பஸ் தறிக்கெட்டு அங்குமிங்கும் ஓடியது. இதனால் என்ன நடக்கிறது என்பதை கூட அறிவதற்குள் பயங்கர சத்தத்துடன் திடீரென்று கவிழ்ந்தது. அதன்பிறகே விபத்து நடந்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர், போலீசார் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.