விவசாயி உள்பட 2 பேர் சாவு
தர்மபுரி, அரூரில் நடந்த விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
அரூர்
விவசாயி
அரூர் அருகே உள்ள கலசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த தமிழரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊழியர் சாவு
தர்மபுரி வேப்பமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் (55). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அந்த பகுதியில் சென்ற டிராக்டரும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்டன.
இதில் படுகாயம் அடைந்த மோகன்குமாரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.