தண்ணீரில் மூழ்கி 2 பேர் சாவு
மல்லசமுத்திரம் அருகே மீன்பிடிக்க சென்ற இடத்தில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
எலச்சிபாளையம்:
மல்லசமுத்திரம் அருகே மீன்பிடிக்க சென்ற இடத்தில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மீன்பிடிக்க...
திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் கோட்டப்பாளையம் கட்டகாடு பகுதியை சேர்ந்தவர் இளையப்பன் (வயது 65). இவர், ஏரியில் மீன்பிடிக்க தன்னுடைய நண்பர் பெரியகாடு கவுண்டம்பாளையம் கருமனூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி (68) என்பவருடன் சென்றார்.
இருவரும் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இளையப்பன் கால் வழுக்கி தண்ணீரில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, இளையப்பனை காப்பாற்ற முயன்றார். அப்போது மீன் பிடிக்க எடுத்து சென்ற வலை கந்தசாமி காலில் சிக்கிக் கொண்டது. இதில் அவரும் நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார். இருவரும் அபய குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
2 பேர் சாவு
இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் இளையப்பனும், கந்தசாமியும் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மீன்பிடிக்க சென்ற முதியவர்கள் 2 பேரில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.