காவிரி ஆற்றில் மூழ்கிய 2 பேர் பலி
லாலாபேட்டையில் காவிரி ஆற்றில் மூழ்கிய 2 பேர் பலியானார்கள்.
காவிரியில் குளித்தனர்
திண்டுக்கல் மாவட்டம், ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் விஷ்வா (வயது 24). இவர் பொறியியல் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியின் மகன் புருஷோத்தமன் (18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு இந்தாண்டு கல்லூரியில் சேர இருந்தார். மகேஸ்வரியும், ரேவதியும் அக்கா, தங்கை ஆவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 குடும்பத்தினரும் கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கொம்பாடிப்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் லாலாபேட்டை காவிரி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர். அப்போது விஷ்வாவும், புருஷோத்தமனும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
பிணமாக மீட்பு
அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இதைக்கண்ட அவர்களது உறவினர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் கரூர் தீயணைப்பு படைவீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி புருஷோத்தமனையும், விஷ்வாவையும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு புருஷோத்தமன் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விஷ்வாவும் சாவு
இதையடுத்து விஷ்வாவின் உடலை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகியதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் காவிரி ஆற்றில் இறங்கி கரூர் தீயணைப்பு படைவீரர்கள் 2-வது நாளாக விஷ்வாவின் உடலை தேடினர். இதையடுத்து காலை 11 மணிக்கு விஷ்வாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை லாலாபேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.