வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பனையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உட்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை பகுதியில் வாணியம்பாடி- நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி சேர்ந்த இலியாஸ் அஹமத்(45), உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமத்(16), ராகில் பையஸ்(22), ஆகிய 4 பேர் குளிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியை கடந்து வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் அணையில் இறங்கிய போது கால் வழுக்கியதால் உஜேர் பாஷா நீரில் விழுந்து மூழ்கியுள்ளார். இதனை தொடர்ந்து இலியாஸ் அஹமத் நீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கி உள்ளார்.
உடன் வந்த இருவர் கண்முன்னே நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருவரும் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து சென்ற பகுதி மக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு இருவருமே சடலமாக மீட்கப்பட்டது. ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.