மொபட் மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் பலி


மொபட் மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் பலி
x

மொபட் மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி

வையம்பட்டி:

குழந்தைகளுடன் மொபட்டில் சென்றார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுஸ்ரீ (3). தியாகராஜனின் மைத்துனர் மகேசின் மகன் புகழேந்தி (2). நேற்று தியாகராஜன் தன்னுடைய மொபட்டில் அனுஸ்ரீ, புகழேந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு வையம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மொபட் மீது மோதியது.

2 பேர் சாவு

இதில் மொபட்டில் சென்ற 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில், தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 குழந்தைகளையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தை புகழேந்தி உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் வையம்பட்டி போலீசார் ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story