கார் மீது லாரி கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 2 பேர் பலி


கார் மீது லாரி கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 2 பேர் பலி
x

வாத்தலை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது லாரி கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், செப்.15-

வாத்தலை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது லாரி கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.

சமயபுரம் கோவிலுக்கு...

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, பெரும்பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவரது மனைவி ராசாத்தி (43), இந்த தம்பதியின் மகன்கள் சஞ்சித் (24), ரஞ்சித் (22).

இவர்கள் நேற்று காலையில் ஒரு காரில் புறப்பட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் சஞ்சித்தின் நண்பரான ரமேஷ் (27), அவரது மனைவி பிரியா (24), இவர்களது மகள் சஞ்சனா (2), ஆகியோரும் வந்தனர். பின்னர் சாமியை தரிசனம் செய்து விட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி காரில் சென்றனர்.

லாரி கவிழ்ந்தது

காரை சஞ்சித் ஓட்டினார். திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாத்தலை என்ற இடத்தில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ராஜா, சஞ்சித், ரஞ்சித், ரமேஷ் ஆகியோர் அருகே உள்ள கடையில் டீ குடிக்க சென்று விட்டனர்.

காரில் ராசாத்தி, பிரியா, குழந்தை சஞ்சனா ஆகிய 3 பேர் அமர்ந்திருந்தனர். அப்போது சேலத்திலிருந்து உரம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டோடி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்தது.

2 பேர் சாவு

இதனால் லாரியின் அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் அமர்ந்திருந்த ராசாத்தி, சஞ்சனா ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். பிரியா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து லாரியின் அடியில் சிக்கிய காரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் விபத்துக்குள்ளான காரையும், அதில் சிக்கியவர்களையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் காரை வெளியே எடுத்தனர். இதனையடுத்து உயிரிழந்த சஞ்சனா மற்றும் ராசாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது உர மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story