ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி


ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி
x

வண்டலூர் மற்றும் ெபருங்களத்தூரில் அடுத்தடுத்து நடந்த இருவேறு விபத்துகளில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு

கல்லூரி மாணவி

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா (வயது 19). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் சோனியா, தன்னுடன் படிக்கும் கல்லூரி நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்றார்.

பூங்காவில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக வண்டலூர் ெரயில் நிலையத்துக்கு கும்பலாக நடந்து வந்தனர். நண்பர்கள் அனைவரும் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமேடையில் ஏறிவிட்டனர்.

ஆனால் சற்று உயரம் குறைவாக இருக்கும் சோனியாவால் நடைமேடையில் ஏற முடியாமல் நடைமேடை தொடங்கும் இடத்தில் ஏறி வருவதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

ரெயிலில் அடிபட்டு பலி

அப்போது சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற சோனியா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நண்பர்கள் மற்றும் தோழிகள் கண் எதிரேயே சோனியா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து சகநண்பர்கள் மற்றும் தோழிகள் கதறி அழுதனர்.

விபத்தில் பலியான சோனியா, அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க வந்தவர், ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு விபத்து

அதேபோல பெருங்களத்தூர் ெரயில் நிலையம் அருகேயும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார்?. எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இருவேறு விபத்துகள் குறித்தும் தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 1 மாதத்தில் மட்டும் வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்டவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டாம் என ரெயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story