போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
திருச்செங்கோட்டில் வாகன சோதனை என்கிற பெயரில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணம் வசூல்
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார், வாகன சோதனை மேற்கொண்டு செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டும் நபர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது இ-செலான் மூலம் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், போலீஸ் ஏட்டு குணசேகரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கிய நபர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து போலீஸ் ஏட்டு குணசேகரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
முன்னதாக நேற்று காலையில் அவர்கள் இருவரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.