இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் பிடிபட்டனர்
கோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் போலீசில் பிடிபட்டனர்.
கோவை
கோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேர் போலீசில் பிடிபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள் திருட்டு
கோவை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட வழக்கில் தனிப்படையினர் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29), ராஜேஸ் (25) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதில் பாலகிருஷ்ணன், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலகிருஷ்ணன், ராஜேஸ் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்து முன்னணி சார்பில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதான பாலகிருஷ்ணனுக்கும், இந்து முன்னணிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் இந்துமுன்னணி கூட்டத்துக்கு சிலமுறை வந்து உள்ளார். ஆனால் அவர் எவ்வித பொறுப்பிலும் இல்லை. எனவே தவறான தகவலை போலீசார் பரப்பி வருவது கண்டனத்துக்குரியது என்று கூறப்பட்டு இருந்தது.