சாலை விபத்தில் பள்ளி மாணவன், தச்சு தொழிலாளி உள்பட ௨ பேர் பலி
அரவக்குறிச்சி, லாலாபேட்டை பகுதிகளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் பள்ளி மாணவன், தச்சு தொழிலாளி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). இவன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நவீன்குமார் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் தனது சகோதரி பிரியாவை (16) அழைத்து கொண்டு ஈசநத்தம் நோக்கி ெசன்று கொண்டிருந்தான்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நவீன்குமார்-பிரியா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி, நிலைதடுமாறி கரூரில் இருந்து திண்டுக்கல் சென்ற தனியார் பஸ் மீதும் மோதி நின்றது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
பிரியா லேசான காயத்துடன் உயிர் தப்பினாள். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி சாவு
லாலாபேட்டை அருகே உள்ள மேலபஞ்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). தச்சு தொழிலாளி. வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களது வேலையை முடித்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் மேலபஞ்சபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாண்டியன் ஓட்டினார். கிருஷ்ணமூர்த்தி பின்னால் அமர்ந்து இருந்தார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கொளத்தூரை சேர்ந்த ஹரி (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பாண்டியன்-கிருஷ்ணமூர்த்தி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.
அப்போது, கழுகூர் மேல கம்பேஸ்வரம் பகுதியை சேர்ந்த குமார் (40) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் கிருஷ்ணமூர்த்தியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயம் அடைந்த பாண்டியன், ஹரி ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் உடலை லாலாபேட்டை போலீசார் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி புஷ்பலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.