கார் மோதி மாணவன் உள்பட 2 பேர் பலி


கார் மோதி மாணவன் உள்பட 2 பேர் பலி
x

பள்ளிகொண்டா அருகே சாலை ஓரம் நடந்து சென்ற பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே சாலை ஓரம் நடந்து சென்ற பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

நடந்து சென்றனர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். வேலூர் மாவட்ட பா.ம.க. துணை செயலாளர். இவரது மகன் வீர ஆர அமுதன் (வயது 12). இவன் அணைக்கட்டில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

தயாளனுக்கு கந்தனேரி அருகே விவசாய நிலம் உள்ளது. தினமும் வீர ஆர அமுதன் காலையில் நிலத்திற்கு சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 7 மணி அளவில் வீர ஆர அமுதன் நிலத்திற்கு செல்ல கன்னிகாபுரம் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (65). தனியார் பள்ளி பஸ்சில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று காலை கன்னிகாபுரம் சாலை ஓரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

கார் மோதி 2 பேர் பலி

பள்ளிகொண்டா காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் குமரவேல் (39). இவர் தனது உறவினர் மகனான 12 வயது சிறுவனுடன் மேல்மலையனூர் கோவிலுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். காரை குமரவேல் ஓட்டினார்.

பள்ளிகொண்டாவை அடுத்த கன்னிகாபுரம் அருகே வந்தபோது கார் நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ரங்கசாமி மீது மோதியது.

இதில் ரங்கசாமி தூக்கி வீசப்பட்டார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் எதிரில் உள்ள புளிய மரத்தில் மோதிவிட்டு சாலை ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த வீர ஆர அமுதன் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரஆரஅமுதன் அங்குள்ள பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலே இறந்தான். ரங்கசாமியும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

டிரைவர் மீது தாக்குதல்

2 பேர் மீதும் மோதிய கார் சிறிது தூரம் சென்று நின்றது. இதை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் கார் டிரைவரை சரமாரியாக தாக்கினர்.

விபத்து நடந்த தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய குமரவேல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விபத்து நடந்த சிறிது நேரத்தில் ஸ்ரீபுரத்திலிருந்து பள்ளி கொண்டா நோக்கி வந்த கார் ஒன்று அதே பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



Related Tags :
Next Story