தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தியாகதுருகம்,
குறுக்கே வந்த டிராக்டர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த ஈய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி கல்பனா(வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் கல்பனா சொந்த வேலை காரணமாக ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சி சென்று விட்டு நேற்று மதியம் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டார். ஈய்யனூர் முனீஸ்வரன்கோவில் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததுடன், அவ்வழியாக கல்பனா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மற்றும் பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதாக கூறப்படுகிறது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கல்பனா மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள திம்பலூர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் அய்யம்பெருமாள் (37) என்பவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அறிந்த கல்பனாவின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டதுடன், விபத்துக்கு காரணமான டிராக்டர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்பனாவின் உறவினர்களை சமாதானம் செய்தனர். இதற்கிடையே விபத்தில் சிக்கி பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் இறந்த அய்யம்பெருமாள் கொத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் டிரைவர் மீது வழக்கு
மேலும் இந்த விபத்து பற்றி கல்பனாவின் உறவினர் தனபால் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஈய்யனூரை சேர்ந்த டிராக்டர் டிரைவரான வெங்கடேசன்(42) மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.